
பாகான், ஜூன்-9-பினாங்கு மாநிலத்தில் வறிய நிலை மற்றும் நடுத்தரக் குடும்பங்களும், இளம் தலைமுறையினரும் எளிதில் சொந்த வீடு வாங்குவதை உறுதிச் செய்யும் நோக்கில், மாநில அரசின் ‘வாடகைக்கு எடுத்துச் சொந்தமாக்கும்’ சிறப்புத் திட்டத்தின் கீழ், 187 புதிய அடுக்குமாடி வீடுகளுக்கான சாவிகள் பயனர்களிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பினாங்கு மாநில வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தலைமையில் அண்மையில் நடைபெற்ற இவ்விழாவில், மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பின் ‘ரூமா முத்தியாராக்கு’ (RMKu) திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 29 குடும்பங்களுக்குச் சலுகைக் கடிதங்கள் அடையாளப்பூர்வமாக எடுத்து வழங்கப்பட்டன.
பினாங்கு மேம்பாட்டுக் கழகமான PDC-யால் கட்டி முடிக்கப்பட்ட இந்த 13 மாடி குடியிருப்பு வளாகம், தற்போது மாநில வீடமைப்பு வாரியத்திடம் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் எளிதில் வீட்டுக் கடன் பெற முடியாத B40 மற்றும் M40 பிரிவினருக்கு உதவும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த _Rent to Own_ திட்டத்தின் மூலம், மக்கள் ஆரம்பத்தில் வாடகைக்குக் குடியேறி, பின்னர் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அவ்வீட்டை முழுமையாகத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
_”சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. வங்கிக் கடன் சிக்கல்களால் நலிந்த பிரிவினரின் வீடு வாங்கும் கனவு முடங்கிவிடக் கூடாது”_ எனக் கூறிய சுந்தராஜு, அதற்காகவே பினாங்கு அரசு இந்தச் சலுகை முறையைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது என்றார்.
தகுதியான அனைத்து மக்களுக்கும் தரமான வீடுகள் கிடைக்க இந்தச் சமூகக் கடமை தொடரும் என, கரவொலிக்கு இடையே அவர் சொன்னார்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சாவி ஒப்படைப்பு விழா, பினாங்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.



