
லண்டன், அக்டோபர்-12,பிரிட்டனில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்த ஆடவர் ஒருவர், புலி தாக்கிய உயிரிழந்தார்.
சனிக்கிழமை பிற்பகல், தெற்கு யோர்க்ஷயரில் உள்ள Yorkshire Wildlife Park மிருகக்காட்சி சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பந்தப்பட்ட ஆடவர், புலி இருந்த பகுதிக்குள் குதித்து, அதன் முன்னால் அமர்ந்து விரலை நீட்டியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, புலி திடீரென அவரைத் தாக்கியதோடு, தப்பிக்க முயன்ற அவரைத் தொடர்ந்து தாக்கியது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர மருத்துவக் குழுவினர், அவரைக் காப்பாற்ற முயன்ற போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மிருகக்காட்சி சாலையிலிருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டு, பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனிடையே, Altai எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் புலி கொல்லப்படாது என்றும், அது பாதுகாப்பாக இருப்பதாகவும் பூங்கா நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ஆடவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.



