Latestமலேசியா

பேராக் சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படாது – மந்திரி பெசார் சாராணி உறுதி!

ஈப்போ, நவ. 23–பேராக் மாநில சட்டமன்றம் நாளை கலைக்கப்பட்டு, முன்கூட்டியே மாநிலத் தேர்தல் நடத்தப்படலாம் எனப் பரவி வரும் வதந்திகளுக்கு மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாராணி முகமட் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இன்று 2027ஆம் ஆண்டுக்கான பேராக் மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சட்டமன்றம் கலைக்கப்படும் எனப் பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மாநில அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஏறத்தாழ ஓராண்டு எஞ்சியுள்ளதால், இப்போதைக்கு சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டிய அவசியம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

“நமது பயணம் இன்னும் நீண்டுள்ளது. இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. சட்டமன்றத்தைக் கலைக்கக் கோரி பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் முயிஸுதீன் ஷாவைச் சந்திக்க வேண்டிய அவசரத் தேவை தற்போது இல்லை” என்று அவர் கூறினார்.

ஈப்போவில் உள்ள இந்திரா மூலியா விளையாட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது சாராணி இதனைத் தெரிவித்தார்.

சட்டமன்றத்தைக் கலைப்பது என்பது மாநில மந்திரி பெசார் தனிப்பட்ட முறையில் எடுக்கக்கூடிய முடிவு அல்ல என்றும், அதற்கான முழுமையான அதிகாரம் பேராக் சுல்தானுக்கே உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாநில ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள பங்காளிக் கட்சி ஒன்று ஆதரவைத் திரும்பப் பெற்று, அதன் காரணமாக அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் சூழ்நிலை உருவானால் மட்டுமே சட்டமன்றத்தைக் கலைக்கக் கோருவது குறித்து பரிசீலிக்க முடியும் என்றார்.

“அத்தகைய சூழ்நிலைதான் சட்டமன்றத்தைக் கலைக்கக் கோருவதற்கான நியாயமான காரணமாக அமையும். இருப்பினும், சட்டமன்றத்தைக் கலைப்பதா இல்லையா என்பது மாட்சிமை தங்கிய பேராக் சுல்தானின் முழுமையான அதிகாரமாகும்” என்றும் அவர் விளக்கினார்.

எனவே, முன்கூட்டியே மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளதாகப் பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்த்து நம்பகமான அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் வாயிலாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், பேராக் மாநில அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மந்திரி பெசார் சட்டமன்றத்தைக் கலைக்குமாறு சுல்தானிடம் கோரிக்கை விடுத்து, அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சாராணி சுட்டிக்காட்டினார்.

அண்மையில் சில மாநிலங்களில் அம்னோ வெற்றி பெற்றிருப்பது பேராக்கிலும் முன்கூட்டியே மாநிலத் தேர்தலை நடத்துவதற்கான உந்துதலாக அமையுமா எனக் கேட்கப்பட்டபோது, அரசியல் வெற்றி அல்லது அரசியல் சூழல் மட்டுமே சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான போதுமான காரணமாகாது என்றார்.

“அரசியல் மனநிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சட்டமன்றத்தைக் கலைக்க முடியாது. பல்வேறு அம்சங்களை ஆராய வேண்டும். தேர்தலுக்கான அரசியல் சூழல் ஒருபுறம் இருந்தாலும், அதற்கான தயார்நிலை என்பது வேறு.

“தற்போது வாக்களிப்பு மாவட்ட மையங்களுக்கான (PDM) தேர்தல் இயந்திரங்கள் முழுமையாகத் தயாராகவில்லை. அதுமட்டுமின்றி, தேர்தலை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடும் எங்களிடம் இல்லை. எனவே, இப்போதைக்கு தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

மூன்று மாநிலங்களில் அம்னோ வெற்றி பெற்றிருப்பதால் பகாங் மற்றும் பேராக் மாநிலங்களும் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்று அர்த்தமல்ல என அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருப்பதையும் சாராணி நினைவுபடுத்தினார்.

“எனது கட்சித் தலைவர் தெரிவித்துள்ள நிலைப்பாட்டையே நானும் பின்பற்றுகிறேன்” என்றார்.

இதற்கிடையில், அண்மைய மாநிலத் தேர்தல்களைத் தொடர்ந்து பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள தேசிய முன்னணி (BN), பக்கத்தான் ஹராப்பான் (PH) கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

அவ்வாறு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து சுமுகமாக நீடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் தாம் பேராக் சுல்தானைச் சந்தித்து சட்டமன்றத்தைக் கலைக்கக் கோரிக்கை விடுத்ததாக வதந்தி பரவியபோதுகூட, உண்மையில் மாநில ஆட்சிக்குழுக் கூட்டம் (EXCO) நடைபெற்றுக் கொண்டிருந்ததாகக் கூறிய அவர், அந்தச் செய்தியைப் பார்த்து தாங்கள் சிரித்ததாகவும் குறிப்பிட்டார்.

“தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஹராப்பான் தலைவர்களுக்கிடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை. மாநில ஆட்சிக்குழுக் கூட்டங்கள் வழக்கம்போல் நடைபெறுகின்றன. அரசாங்கத்தின் செயல்பாடுகளிலும் எந்தத் தடையும் இல்லை.

“எனக்கு ஆதரவாக இருக்கும் பக்கத்தான் ஹராப்பான் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் அனைவரும் தொழில்முறையுடன் செயல்படுகிறோம். மக்களால் வழங்கப்பட்ட ஆட்சிக்காலம் இருக்கும் வரை மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்துச் செயல்படுவதே எங்களது நோக்கம்” என்று சாராணி மேலும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!