
ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.21-பினாங்கு மலையில் ஒரு பொதுவான அறிவுறுத்தல் மோதலாக மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பொதுக் குழாய் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்த இரு மலையேறிகளிடம் பினாங்கு மலை நிர்வாக மன்ற ஊழியர் ஒருவர் அவ்வாறு செய்ய அனுமதியில்லை என கூறியதை அடுத்து நிலைமை கைமீறியதாகக் கூறப்படுகிறது.
833 மீட்டர் உயரமுள்ள மலை உச்சிப் பாதைகளுக்குச் செல்லும் பொதுவான பாதையின் கீழ்நிலை funicular நிலையத்திற்கு அருகிலேயே அச்சம்பவம் நிகழ்ந்தது. இரு ஆண்கள் பின்புறப் பாதையில் உள்ள குழாயைப் பயன்படுத்துவது அங்கு எடுக்க புகைப்படங்களில் தெரிகிறது. அவர்களில் சட்டை அணியாத ஒருவர், மலையேறிய பிறகு உடலில் படிந்திருந்த வியர்வையையும் தூசியையும் கழுவிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.
நிலைய வளாகத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு மலை நிர்வாக மன்ற ஊழியர் ஒருவர் பணிவாக எடுத்துக் கூறிய நிலையில், அவ்விருவரும் வன்முறையிலான மிரட்டல்களை விடுத்ததாக பினாங்கு மலை நிர்வாக மன்றம் அறிக்கையொன்றில் தெரிவித்தது.
தங்களது ஊழியர் மிரட்டப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்த PHC, சம்பவம் நிகழ்ந்த இடம் முழுவதும் CCTV கண்காணிப்பில் இருப்பதாகவும், விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நினைவுறுத்தியது.
UNESCO பினாங்கு மலை உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாக விளங்கும் அப்பகுதியில் உள்ள வசதிகள், உள்ளூர் மற்றும் அனைத்துலகப் பயணிகள் என அனைவரும் பயன்படுத்தக்கூடிய பொது இடங்களாக இருப்பதாக PHC வலியுறுத்தியது. அனைத்து சுற்றுப் பயணிகளும் விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு தங்களின் ஊழியர்கள், வசதிகள் மற்றும் சக பயணிகளை மதிக்குமாறும் அது கேட்டுக் கொண்டது.



