
புக்கிட் ஜாலில், ஆகஸ்ட்-8-கோலாலம்பூர், தாமான் OUG பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்கள் மற்றும் இனவாதக் கருத்துகளுக்கு எதிராகக் கோவில் நிர்வாகம் போலீஸில் புகார் அளித்துள்ளது.
ஜாலான் மாஸில் உள்ள இக்கோவிலை அகற்றாமல், சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகச் செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக், DBKL மற்றும் அரசு அதிகாரிகளுடன் முன்னதாக ஆலோசனை நடத்தினார்.
இவ்விவகாரத்திற்கு சுமூகத் தீர்வு காண அதிகாரிகள் முன்வந்திருப்பதாகக் கூறி, தனது ஃபேஸ்புக்கில் தெரேசா ஒரு பதிவும் இட்டிருந்தார்.
ஆனால், இந்தச் சந்திப்பைக் சுட்டிக்காட்டி, சமூக வலைத்தளங்களில் மதபோதகர் ஃபிர்டாவுஸ் வோங் உள்ளிட்ட சிலர் இக்கோவிலை ‘சட்டவிரோதக் கோவில்’ எனக் குறிப்பிட்டு இனவாதச் சாயத்தைப் பூச முயன்றதாகக் கோவில் நிர்வாகம் சாடியுள்ளது.
குறிப்பாக, ஃபிர்டாவுஸ் வோங், தெரேசா கோக் ‘சட்டவிரோதக் கோயில்களை’ அங்கீகரிக்கும் முயற்சியை முன்னெடுப்பதாகக் கூறியுள்ளார்.
தனது முந்தையப் பதிவை தெரேசா மறைத்தோ அல்லது அழித்தோ விட்டதாகவும், இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றும் ஃபிர்டாவுஸ் தொடர்ந்து இன-மன ரீதியாகப் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், RoS எனப்படும் சங்கப் பதிவிலாவில் முறையாகப் பதியப்பட்ட ஆலயம் இதுவென, புக்கிட் ஜாலில் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தப் பிறகு ஆலய நிர்வாகத்தினர் கூறினர்.
மத உணர்வுகளைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆலய விவகாரத்திற்கு நல்லிணக்க அடிப்படையில் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தீர்வுக் காண விழையும் போது,மக்களிடையே தேவையில்லாத பதற்றத்தையும் இனவாதப் பிளவையும் ஏற்படுத்தும் வகையில் இந்த சமூக வலைத்தளங்களில் பொய்ப் தகவல்கள் பரப்பப்படுகின்றன.
இது தவிர்க்கப்பட வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர்.



