
மலாக்கா மாநில இந்தியச் சமூகத்தின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வாக, நிரந்தர இந்து ஈமச் சடங்கு மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 10.30 மணிக்கு மலாக்கா Port Beatlogs-ல் நடைபெற்றது.
சுமார் 10,000 சதுர அடி அரசு நிலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த மையத்துக்கு மாநில அரசு 1 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்கள் கூடுவதற்காக மூன்று கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், அருகில் கழிப்பறை மற்றும் குளியல் வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.
இந்திய சமூகத்தின் நீண்டகால கோரிக்கையைத் தொடர்ந்து மாநில அரசிடம் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, Rumah Ibadat Selain Islam மற்றும் மாநில ஆட்சிக்குழுவின் அனுமதியுடன் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் மேற்பார்வையில் நடைபெறும்.
மையம் நிறைவடைந்ததும் அதன் நிர்வாகம் மலேசிய இந்து சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், மலாக்காவில் உள்ள அனைத்து இந்தியர்களும் இதனை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் Dato T. Murugiah தெரிவித்தார். குறிப்பாக, வசதி குறைந்த குடும்பங்களின் இறுதிச் சடங்கு செலவுச் சுமையைக் குறைப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இந்திய சமூகத்தின் நீண்டகால கோரிக்கையைத் தொடர்ந்து இந்த விவகாரம் மாநில அரசிடம் முன்வைக்கப்பட்டதாகவும், மாநில அரசு 1 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளதுடன், கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் Datuk V.P. Shanmugam கூறினார்.
மேலும், இந்தத் திட்டம் தேர்தலை முன்னிட்டு அவசரமாக மேற்கொள்ளப்பட்டதல்ல என்றும், தேவையான ஒப்புதல்கள் கடந்த ஜூன் மாதமே பெறப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
பணிகள் விரைவாக நடைபெற மாநிலக் கவுன்சிலர்களான கார்த்திகேயன் மற்றும் லினேஷ் ஆகியோர் மேற்பார்வை செய்வார்கள் என்றும் அவர்கள் கூறினர்.



