
செரம்பான், ஜூலை 23-நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, மலாய்-முஸ்லிம் ஒற்றுமை எனும் அரசியல் முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பாரிசான் நேஷனல் (BN) மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) முன்னெடுத்து வரும் பிரசாரம், சமூக ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பாக்காத்தான் ஹாராப்பான் (PH) எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
அமானா கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநர் காலிட் சமாட் கூறுகையில், மலாய்க்காரர்களின் ஒற்றுமை என்பது தவறான கருத்தல்ல. அதேபோல் சீனர்கள் அல்லது இந்தியர்கள் ஒன்றுபடுவதிலும் எந்தத் தவறும் இல்லை.
ஆனால், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக சித்தரித்து பல்லின மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வதே ஆபத்தான அரசியல் என்று அவர் வலியுறுத்தினார்.
“மலாய்க்காரர்கள் ஒன்றுபட வேண்டும் என்பதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், ‘மலாய்க்காரர் அல்லாதவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்’ என்ற மறைமுக அரசியல் செய்தியுடன் அந்த ஒற்றுமை உருவாக்கப்பட்டால், அது இனங்களுக்கிடையே அவநம்பிக்கை, வெறுப்பு மற்றும் பிளவை மட்டுமே அதிகரிக்கும்,” என்றார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலில் இதே அரசியல் அணுகுமுறை மலாய் வாக்குகளை தேசிய முன்னணிக்கு சாதகமாக ஒருங்கிணைக்க உதவியதை ஒப்புக்கொண்ட காலிட், நெகிரி செம்பிலானில் அதற்கு பதிலாக நல்லாட்சி, நிர்வாக செயல்திறன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி என்பதையே பாக்காத்தான் ஹாராபான் முன்வைக்கும் என்றார்.
இதேவேளை, பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் ஃபஹ்மி ஃபாட்சில், மலாய்-முஸ்லிம் சமூகத்தின் நலனை ஒரு குறிப்பிட்ட தரப்பால்
மட்டுமே உறுதி செய்ய முடியும் எனும் கருத்தையும் நிராகரித்தார்.
“நாங்களும் மலாய்-முஸ்லிம்கள்தான். அப்படியிருக்க, மலாய்-முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமை ஒரு தரப்புக்கே சொந்தமானது எனும் அரசியல், மலேசியாவின் பன்முகத் தன்மைக்கு பொருந்தாது,” என்றார்.
நெகிரி செம்பிலானில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்காலத்தில் புதிய பள்ளிவாசல்கள் கட்டப்பட்டதோடு, ஸமச் (Zakat) வசூலும் இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், மலாய்-முஸ்லிம் சமூகத்தின் நலன் புறக்கணிக்கப்பட்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றார்.



