
ஷா அலாம், ஜூன்-15-ஷா அலாம் ,செக்சன் 19 இல் உள்ள ஒரு பள்ளிவாசலின் காற்பந்து மைதானத்தில் இரண்டு பள்ளி மாணவர்ளுக்கிடையே நடந்த சண்டை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமையன்று மதியம் சுமார் 1 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையிடமிருந்து தகவல் கிடைத்ததாகக் ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சருடின் சமா (Sarudin Samah ) தெரிவித்தார்.
13 மற்றும் 14 வயதுடைய அந்த இரண்டு மாணவர்களும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்பதோடு அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்று தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.
இந்தச் சண்டையில் அந்த இரண்டு மாணவர்கள் மட்டுமே ஈடுபட்டனர், ஆனால் சம்பவ இடத்தில் இருந்த வேறு பல மாணவர்களும் இந்தச் சம்பவத்தைக் கண்டதாக நம்பப்படுகிறது.
மாணவர்களில் ஒருவர் பின்னர் ஷா ஆலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதோடு அவரது தசையில் காயம் ஏற்பட்டிருப்பது உறதிப்படுத்தப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323-ன் கீழ் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சருடின் சமா குறிப்பிட்டார்.



