
கோலாலம்பூர், ஜூலை.21-பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எந்தவோர் அமைச்சரையோ அல்லது துணை அமைச்சரையோ பதவி விலகுமாறு உத்தரவிடவில்லை. நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும், கூட்டரசு அரசாங்கப் பதவிகளை வகிப்பவர்கள் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதே பிரமரின் நினைவூட்டலாக இருந்தது என அரசாங்க செய்தித் தொடர்பாளர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நடைமுறையில் கருத்து வேறுபாடுகள் இருக்க இடமுண்டு என பிரதமர் நம்புகிறார். உண்மையில், இதற்கு முந்தைய பல மாநிலத் தேர்தல்களில், ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தனித் தனியாகவே போட்டியிட்டன. என்றாலும், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அனைவரும் தொடர்ந்து ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்துகிறார்.
அதோடு கூட்டரசு அளவில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கண்ணோட்டத்தைப் பாதிக்கக்கூடும் என்ற நிலையையும் பிரதமர் கருத்தில் கொண்டுள்ளார். ஜனநாயக ரீதியான கருத்து வேறுபாடுகளைக் கையாள்வதில், நிலைத்தன்மையும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் பிரதமருக்கு முக்கியமான ஒன்றாகும் என தகவல், தொடர்புத்துறை அமைச்சருமான ஃபாஹ்மி தெளிவுபடுத்தினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள தங்கள் பங்காளிகளைத் தாக்க மாநிலத் தேர்தல்களை ஒரு தளமாகப் பயன்படுத்தினால், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அரசு நிறுவனப் பதவிகளில் இருப்பவர்கள் பதவி விலக வேண்டும் என்று அன்வார் நேற்று கூறியிருந்தார்.
அதன் பிறகு, வெளியுறவு அமைச்சரும் Barisan Nasionalலின் துணைத் தலைவருமான Datuk Seri Muhamad Hasan, தேர்தல் பிரச்சாரத்தின் போது மற்ற ஒற்றுமை அரசாங்கத் தலைவர்களைத் தாக்கும் எண்ணம் தனக்கு இல்லை எனவும், உத்தரவிடப்பட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இவ்வேளையில், அன்வாருடன் உடன்படுவதாகவும், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளிடையே ஒத்துழைப்பு நீடிப்பதாகவும் போக்குவரத்து அமைச்சரும் DAP பொதுச் செயலாளருமான அந்தோணி லோக்கும் கூறியிருந்தார்.



