
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-18- ஜோகூர், கூலாயில் ‘ஜாலூர் கெமிலாங்’ கொடியையும் மாநிலக் கொடியையும் தலைகீழாகப் பறக்க விட்ட தொழிற்சாலையொன்றைத் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்கொடிகள் நாட்டின் மற்றும் மாநிலத்தின் அடையாளம், கண்ணியம், இறையாண்மையைப் பிரதிபலிப்பவை. எனவே அத்தகையச் சம்பவத்தைக் கடுமையான ஒன்றாகக் கருதுவதாக மாநில வீட்டுவசதி மற்றும் ஊராட்சி நிர்வாகக் குழுத் தலைவர் Datuk Mohd Jafni Md Shukor தெரிவித்தார்.
அவ்விவகாரம் குறித்து விளக்கம் மற்றும் உறுதிமொழி பெறும் வரை, கூலாய் நகராண்மைக் கழகம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையைத் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் அவ்விரு கொடிகளும் உடனடியாகச் சரி செய்யப்பட்டு விட்டன. காவல்துறை அதன் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது. அத்தொழிற்சாலையின் இயக்குனர் விளக்கம் அளிக்க அழைக்கப்படுவார். விசாரணையின் முடிவடையும் வரை மாநில அரசு காத்திருக்கும் என அவர் கூறினார்.
இதனிடையே ஜோகூர் மாநிலத்தில் உள்ள வணிக உரிமையாளர்கள், நிறுவன நிர்வாகத்தினர் மற்றும் தொழில் நடத்துநர்கள் அனைவரும் கொடிகளைச் சரியாக, நேர்த்தியாகவும் பொறுப்புடனும் பறக்க விடுவதை உறுதி செய்ய வேண்டும். கவனக்குறைவை ஒரு காரணமாகக் கூற முடியாது. நடைமுறையில் உள்ள சட்டம் அல்லது விதிமுறைகளை மீறும் தரப்பினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என Mohd Jafni நினைவுறுத்தினார்.



