
கோலாலம்பூர், ஜூலை-24-அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், வர்த்தகக் கொள்கைகளை மாற்றி வருவதன் எதிரொலியாக மலேசியாவுக்கு 10 விழுக்காடு புதிய இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
கட்டாய உழைப்பு தொடர்பான இறக்குமதி விதிகளை அமல்படுத்துவதிலும் திறம்படச் செயல்படுத்துவதிலும் தவறியதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்காவின் புதிய ‘செக்ஷன் 301’ வரி விதிப்புகளின் கீழ், ஆசியான் நாடுகளில் மலேசியா மிகக் குறைந்த அளவில் 10 விழுக்காட்டு வரியை எதிர்கொள்கிறது.
மலேசியாவைப் போன்று, கம்போடியாவும் இந்தோனேசியாவும் 10 விழுக்காடு வரி விதிப்பை எதிர்கொண்டுள்ள ஆசியான் நாடுகளில் அடங்கும்.
கட்டாய உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை விதிக்கவும், அதைத் திறம்பட அமல்படுத்தவும் தவறிய 60 பொருளாதார அமைப்புகள் மீது வரிகளை விதிப்பதன் மூலம், 1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் கீழ் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இறுதி நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக USTR எனும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீண்டகாலமாக நீடித்து வரும் இக்கவலைகளுக்குத் தீர்வு காணும் வகையில், இரு கட்ட பொது விசாரணைகள், 2,100-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் கருத்துகள் மற்றும் வர்த்தகக் கூட்டாளிகளுடனான கலந்தாய்வு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆய்வுகளுக்குப் பின்னரே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது அனைத்து இடங்களிலும் உள்ள தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தவும், மனித உரிமை மீறல்கள் மற்றும் வர்த்தகச் சூழலைச் சிதைக்கும் நடைமுறைகளைச் சரி செய்யவும் வகை செய்யும். எனவே 10 விழுக்காடு வரி விகிதம் பொருத்தமானது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக USTR குறிப்பிட்டது. வேறு சில பொருளாதாரங்களுக்கு 12.5 விழுக்காடு விதிக்கப்படுகிறது.



