Latestமலேசியா

அன்வாரை விட்டு விலகவோ அல்லது கைவிடவோ DAP திட்டமிடவில்லை – அந்தோணி லோக்

கோலாலம்பூர், ஜூலை-24-பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவளிப்பதில் DAP கட்சி உறுதியாக இருக்கிறது. ஒற்றுமை அரசாங்கத்தில் தங்கள் தலைவர்கள் நீடிக்க வேண்டுமா என்பதை கட்சி விரைவில் மதிப்பீடு செய்யும் என்றாலும் அன்வாரை விட்டு விலகவோ அல்லது கைவிடவோ எண்ணமில்லை என DAP பொதுச் செயலாளர் லோக் தெரிவித்திருக்கிறார்.

கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற சபா தேர்தலில் கட்சியின் மோசமான பின்னடைவைத் தொடர்ந்து, அதன் தலைவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலக வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க, DAP வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மாநாடு ஒன்றை நடத்தவிருக்கிறது.

சபாவில் ஏற்பட்ட படுதோல்வியை கட்சியால்புறக்கணிக்க முடியாது. அங்கு அது போட்டியிட்ட எட்டு இடங்களிலும் தோல்வியடைந்தது. அவற்றில் ஆறு இடங்கள் Warisan வசம் சென்றன.

ஓர் அரசியல் கட்சி உயிர்ப்போடு இருக்க வாக்காளர்கள் மிக அவசியம். அவர்களைச் சார்ந்தே கட்சி உள்ளது. எனவே தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து DAP தனது அணுகுமுறையை மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

ஓர் அரசியல் கட்சியாக, தேர்தல் முடிவுகளுக்கு பதிலளிக்க வேண்டும். எதுவும் நடக்காதது போல் இருந்தால், நாங்கள் பாடம் கற்கவில்லை என்றும் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கவில்லை என்றும் பேசப்படும்.

ஆனால், அதற்காக நாங்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறுகிறோம் அல்லது பிரதமரைக் கைவிடுகிறோம் என்று அர்த்தமல்ல என AstroAwaniயின் Tiger Show நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

அரசாங்கத்தில் DAP பங்கேற்றதில் சில விட்டுக் கொடுப்புகள் இருந்தன. அதனால் அக்கட்சி தொடர்ந்து உன்னிப்பான கண்காணிப்புக்கு உள்ளானது. என்றாலும், ஐந்து அமைச்சர்களைக் கொண்ட அக்கட்சி அமைச்சரவையில் முக்கிய விவகாரங்களைத் தொடர்ந்து எழுப்பி வருவதாக அந்தோணி லோக் வலியுறுத்தினார்.

மாநாட்டின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அடுத்த பொதுத் தேர்தல் வரை DAP-யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்.

ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை DAP திரும்பப் பெறாது. அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடாது என்றும் அவர் உறுதியாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தகக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!