Latestமலேசியா

பழைய நண்பர் எனக் கூறிக் கொண்டு கடன் கேட்டவரிடம், எதுவும் விசாரிக்காமல் 11,600 ரிங்கிட்டைக் கொடுத்து ஏமாந்த e-hailing ஓட்டுநர்

சிபு, மார்ச்-22, சரவாக் சிபுவில் தனது பழைய நண்பர் எனக் கூறி ஆள்மாறாட்டம் செய்த ஆடவரை நம்பி, e-hailing ஓட்டுநர் 11,600 ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.

கடந்த வாரம் செவ்வாய்க் கிழமையன்று பழைய நண்பர் என அடையாளம் கூறிக் கொண்டவரிடமிருந்து கைப்பேசி அழைப்பைப் பெற்றிருக்கிறார் 50 வயது அந்த ஓட்டுநர்.

திடீரென அழைத்தவர், தனது கைப்பேசி காணாமல் போய் விட்டதாக சோக கீதம் பாடியதோடு, வீட்டை அவசரமாகப் பழுதுப் பார்க்க கையில் பணம் இல்லை என்றும் கடன் கொடுக்குமாறும் கேட்டுள்ளார்.

காரோட்டியோ, கொஞ்சமும் யோசிக்காமல் உதவுதற்கு ஒப்புக் கொண்டு, சந்தேக நபர் கொடுத்த உள்ளூர் வங்கிக் கணக்கிற்கு 11,600 ரிங்கிட்டை பரிமாற்றம் செய்திருக்கிறார்.

எல்லா பணத்தையும் மாற்றி விட்ட பிறகு, எதிர் திசையில் இருந்து எந்தத் தகவலும் இல்லை; அழைத்தாலும் அந்நபர் கைப்பேசியை எடுப்பதில்லை.

அதன் பிறகே, தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக காரோட்டிக்கு சந்தேகம் எழுந்து அவர் போலீசில் புகார் செய்ததாக, Sibu மாவட்ட போலீஸ் தலைவர் ACP சுல்கிப்ளி சுஹாய்லி கூறினார்.

இவ்வேளையில், வரும் அழைப்புகளை எல்லாம் ஒன்றுக்கு பல தடவை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் இப்படி ஏமாந்துப் போவதைத் தவிர்க்குமாறு பொது மக்களை சுல்கிப்ளி கேட்டுக் கொண்டார்.

முன் பின் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளில் அதிக கவனம் தேவை; யாரோ வங்கிக் கணக்கைக் கொடுத்து பணம் கேட்டால் அப்படியே கொடுத்து விடுவதா என அவர் கேள்வி எழுப்பினார்.

மர்ம நபர்கள் ஆள்மாறாட்டம் செய்வதாக உணர்ந்தால், தேசிய மோசடி அவசர அழைப்பு மையம் NSRC-யை 997 என்ற எண்களில் பொது மக்கள் தொடர்புக் கொள்ளலாம்.

அதோடு, CyberCrimeAlertRMP மற்றும் JSJKPDRM facebook பக்கக்கங்களுக்குச் செல்லலாம் என்றார் அவர்.

சந்தேகத்தைக் கிளப்பும் வங்கிக் கணக்குகள், கைப்பேசி எண்கள் உள்ளிட்டவற்றை http://ccid.rmp.gov.my/semakmule/ என்ற இணைய அகப்பக்கத்திலும் பொது மக்கள் பரிசோதித்துக் கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!