Latestமலேசியா

மகனை அலட்சியப்படுத்தியதாக, சையின் ராயன் பெற்றோருக்கு எதிராக குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 13 – ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் சையின் ராயனை, காயம் ஏற்படும் அளவுக்கு அலட்சியம் செய்ததாக, அவனது பெற்றோருக்கு எதிராக இன்று பெட்டாலிங் ஜெயா செஷனஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

எனினும், 29 வயதான ஜைம் இக்குவான் (Zaim Ikhwan) மற்றும் இஸ்மானிரா அப்துல் மனாப் (Ismanira Abdul Manaf) ஆகிய அவ்விருவரும், தங்களுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

ஆறு வயது சையின் ராயனை பராமரிக்கும் பொறுப்பை கொண்டிருந்த அவர்கள், காயம் ஏற்படும் அளவுக்கு அவரை புறக்கணித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

கடந்தண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி நண்பகல் மணி 12-க்கும், டிசம்பர் ஆறாம் தேதி இரவு மணி 9.55-க்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்தாண்டு டிசம்பர் ஆறாம் தேதி, வீட்டிற்கு அருகிலுள்ள, சிற்றோடைக்கு அருகில் இருந்து சிறுவன் சையின் ராயனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவனது கழுத்திலும், உடலிலும், தற்காப்புக்காக போராடிய காயங்கள் இருந்தது சவப்பரிசோதனையில் பின்னர் தெரிய வந்தது.

இவ்வேளையில், நேற்று கைதுச் செய்யப்பட்ட சையின் ராயனின், தாத்தாவும்,பாட்டியும், 24 மணி நேர விசாரணைக்கு பின்னர் இன்று போலீஸ் உத்தரவாததின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் மீது நீதிமன்ற வழக்கு எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை என்பதை, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ஷாருல்நிசாம் ஜபார் (Shahrulnizam Jaafar) உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!