
கோலாலம்பூர், ஆக-23-இன்று அதிகாலை MEX நெடுஞ்சாலையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய ஆடவர் ஒருவரின் கார் , இ-ஹெய்லிங் வாகனம் மீது மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெரோடுவா அல்சா ( Perodua Alza ) மற்றும் போர்ட் பீஸ்டா ( Ford Fiesta) சம்பந்தப்பட்ட விபத்து குறித்து காலை மணி 5.38 க்கு போலீஸ் துறைக்கு தகவல் கிடைத்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் சம்சுரி இசா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
31 வயதான இராணுவ அதிகாரி தனது Ford Fiesta காரை எதிர் திசைப் பாதைக்கு ஓட்டிச் சென்று, 41 வயதான இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஓட்டி வந்த புரோடுவா அல்சா காரின் மீது நேருக்கு நேர் மோதியது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கே.எல்.ஐ.ஏ-விலிருந்து 22 வயது ஆண் மற்றும் 20 வயது பெண் என இரண்டு வங்காளதேச நாட்டினர் அந்த அல்சா காரில் பயணம் செய்தனர்.
பின் இருக்கையின் நடுவில் அமர்ந்திருந்த ஆண் பயணியின் , தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார் என சம்சுரி கூறினார்.



