
கோலாலம்பூர், ஆகஸ்ட்-23 – ஸ்தாப்பாக்கில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், அவர் பகடிவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து போலீஸார் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 92 சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 18 அதிகாலை 2 மணியளவில், ஜாலான் லங்காவியில் உள்ள தனது வீட்டில் மாணவி அவசர நிலையில் இருப்பதை அவரது தாயார் கண்டறிந்தார்.
உடனடியாக கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த மாணவி, அதிகாலை 2.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பயம் அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கிலான தகாத நடத்தை மற்றும் துன்புறுத்தல் பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மாணவியின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.



