
கொழும்பு, செப்டம்பர்-23,இலங்கையில் 2019-ஆம் ஆண்டு 279 பேரைக் கொன்ற ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.
முன்னதாக, வழக்கிலிருந்த 24 பேரில் 14 பேர் மீது பயங்கரவாத சதி, கொலை மற்றும் ஆயுதங்கள், வெடிபொருட்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன.
15-ஆவது நபர் சில குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட நிலையில், அவர்கள் 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், குற்றவாளிகள் 15 பேரின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் 9 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சதித்திட்டத்திற்கு ஆதரவளித்து முக்கிய மூளையாகச் செயல்பட்டதாக Naufer Moulavi என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
2019 ஏப்ரல் 21-ஆம் தேதி 3 தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு விடுதிகள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 45 வெளிநாட்டவர்கள் உட்பட 279 பேர் பலியாயினர்; 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இலங்கையில் பல ஆண்டுகளாக மரண தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில், குற்றவாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்கும் வகையில் இந்த கடுங்காவல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



