Latestமலேசியா

3R, வெறுப்புப் பேச்சு விவகாரங்களைக் கையாள SUHAKAM-இல் நல்லிணக்க ஆணையரை நியமிக்க முன்மொழிவு — தேசிய ஒற்றுமை அமைச்சு

புத்ராஜெயா, அக்.07 –3R எனும் இனம், மதம் மற்றும் அரச குடும்பம், வெறுப்புப் பேச்சு மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான விவகாரங்களைக் கையாள, மலேசிய மனித உரிமைகள் ஆணையமான SUHAKAM-இடம் நல்லிணக்க ஆணையர் ஒருவரை நியமிக்க தேசிய ஒற்றுமை அமைச்சு முன்மொழியவிருக்கிறது.

நடப்பில் 3R மற்றும் வெறுப்புப் பேச்சு தொடர்பாக தேச நிந்தனைச் சட்டம் 1948, தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998, அச்சு இயந்திரங்கள், வெளியீடுகள் சட்டம் 1984, குற்றவியல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. எனவே, புதிய நிறுவனம் அல்லது சட்டத்தை உருவாக்கும் முன், ஏற்கனவே உள்ள சட்டங்களின் அமலாக்கத்தை வலுப்படுத்துவது குறித்து விரிவாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் அமைச்சு கூறியது.

அதற்காக, தேசிய ஒற்றுமை அமைச்சின் தலைமைச் செயலாளர் தலைமையிலான ஒற்றுமை விவகார மேலாண்மைக் குழு (JPIP), 3R மற்றும் வெறுப்புப் பேச்சு தொடர்பான சட்டங்களின் செயல்திறன், அதிகார வரம்பு மற்றும் அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளை ஆய்வு செய்யும். அதில் உள்துறை அமைச்சு, தொடர்புத்துறை அமைச்சு மற்றும் சட்ட விவகாரப் பிரிவின் மூத்த அதிகாரிகளும் இடம்பெறுவர்.

மேலும், சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால் சமூக அளவில் மோதல்களைத் தீர்ப்பதற்கான சமரச முயற்சிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என அமைச்சு தெரிவித்தது. தற்போது நல்லிணக்க அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள், மதக் குழுக்கள் மற்றும் Kawasan Rukun Tetangga உறுப்பினர்கள் உள்ளிட்ட 617 சமூக சமரசப் பேச்சாளர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், 2023 முதல் 2026 வரை நீதிமன்றத்துக்குச் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் 521 சமூக மற்றும் அண்டை வீட்டுப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்புத் துறை (JPNIN) மூலம் தடுப்பு நடவடிக்கைகள், முன்கூட்டிய தலையீடு, சமரசம், அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ‘தேசிய சமூக நல்லிணக்கக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை’ அமைச்சு உருவாக்கவுள்ளது. சமூக நல்லிணக்கத்தை விரிவான முறையில் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அது குறிப்பிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!