
கோத்தா பாரு, மே-4-கிளந்தான், கெத்தேரேவில் கல்லூரி மாணவி ஒருவர் 61 முறை கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சமூக ஊடகங்களில் பரவி வரும் உண்மைக்கு புறம்பான தகவல்களை போலீஸார் கண்டித்துள்ளனர்.
தவறான மற்றும் வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ Mohd Yusoff Mamat எச்சரித்தார்.
சந்தேக நபர்களின் பின்புலம் மற்றும் கிளந்தான் போலீஸ் தலைவரின் அதிகாரப்பூர்வ புகைப்படம் போன்றவை பரப்பப்படுவதும் அவற்றிலடங்கும்.
அதோடு, அரச மலேசியப் போலீஸ் படையின் அதிகாரப்பூர்வ சின்னமும் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது; இதனால் சம்பந்தபட்ட உள்ளடக்கம் போலீஸின் அதிகாரப்பூர்வ அறிக்கை போன்ற கண்ணோட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, Yusoff கூறினார்.
இக்கொலை வழக்கு தொடர்பாகப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, தவறான தகவல்களைப் பரப்புவது விசாரணையின் போக்கைத் திசைதிருப்பும் என்றும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
பொது மக்கள் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



