பாலேக் பூலாவ், ஜனவரி-25, பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 500,000 ரிங்கிட் நட்டத்தை ஏற்படுத்திய இணைய மோசடி கும்பல் போலீஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
பாராட் டாயா வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை மேற்கொண்ட Ops Nuri, Ops Merpati, Ops Belatuk, Ops Pelican ஆகியத் தொடர் அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில், செந்தூல், பங்சார், செர்டாங் என பல்வேறு இடங்களில் அக்கும்பலைச் சேர்ந்த எழுவர் சிக்கினர்.
அவர்கள் முறையே 22 முதல் 34 வயதிலான 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஆவர்.
தொழிற்சாலை ஊழியர், உணவு அனுப்பும் தொழில் செய்வோர், மற்றும் வேலையில்லாதவர்கள் என்ற பல்வேறு பின்னணியை அவர்கள் கொண்டுள்ளனர்.
மோசடிப் பணப் பரிமாற்றத்திற்கு தங்களது வங்கிக் கணக்கை மூன்றாம் தரப்பினர் பயன்படுத்த, அந்த எழுவரும் அனுமதித்து வந்துள்ளனர்.
குறிப்பிட்ட சில சன்மானங்கள் கிடைப்பதால், தங்களின் வங்கிக் கணக்கையும், ATM அட்டைகளையும் மோசடிக்காரர்களிடம் அவர்கள் ‘தாரை வார்த்துள்ளனர்’.
இவ்வாறு மூன்றாம் தரப்பின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவதால், மோசடிக்காரர்களை நேரடியாக போலீஸ் அடையாளம் காண வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இல்லாத முதலீட்டுத் திட்டங்கள், வாடிக்கையாளர்களுக்குக் கடைசி வரை பொருட்கள் போய் சேராத இணைய விற்பனை, அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து தனிநபர் விவரங்களைக் கைப்பற்றுதல் போன்ற மோசடிகளை அக்கும்பல் நடத்தி வந்துள்ளது.
இவர்களை நம்பி ஏமாந்தவர்களுக்கு மொத்தமாக 476,819 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.