புத்ராஜெயா, மே-14, தனித்து வாழும் இந்துத் தாய் Loh Siew Hong-கின் முன்னாள் கணவரால் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்ட 3 பிள்ளைகளும், இஸ்லாம் அல்லாதவர்களாவே நீடிப்பதாக, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
பெர்லிஸ் இஸ்லாமிய சமய மற்றும் மலாய் சடங்குகள் மன்றம் (Maips) மற்றும் இதர மூன்று தரப்புகளின் மேல்முறையீட்டு மனுவை இன்று நிராகரித்து,
நாட்டின் தலைமை நீதிபதி Tengku Maimun Tuan Mat தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழு அத்தீர்ப்பை வழங்கியது.
பெர்லிஸ் மாநில அரசாங்கம், பெர்லிஸ் முஃப்தி Mohd Asri Zainul Abidin மற்றும் மாநில முவாலாஃவ் பதிவதிகாரி ஆகியோரே ஏனைய மூன்று தரப்புகள் ஆவர்.
அம்மூன்று பிள்ளைகளின் தந்தையான Muhammad Nagahswaran Muniandy, 2020-ஆம் ஆண்டு ஒருதலைப்பட்சமாக அம்மூவரையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றியது செல்லும் என அறிவிக்கக் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
15 வயதிலான தனது இரட்டைக் குழந்தைகள் மற்றும் 12 வயது மகன் ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டதை ரத்துச் செய்யக் கோரி முன்னதாக Loh செய்திருந்த மனுவை ஜனவரி 10-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருந்தது.
அத்தீர்ப்பை எதிர்த்து Maips உள்ளிட்ட மேற்கண்ட தரப்புகள் கூட்டரசு நீதிமன்றத்தின் உதவியை நாடிய நிலையில், அவர்களின் கடைசி முயற்சி இன்று தோல்வியில் முடிந்துள்ளது.
இதையடுத்து Loh Siew Hong-கின் மூன்றுப் பிள்ளைகளும் தாய் மதமான இந்து மதத்திலேயே நீடிக்கின்றனர்.