Latestமலேசியா

மீண்டும் சீண்டும் சாம்ரி வினோத்: ’சட்டவிரோத’ வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக 141 NGO-கள் பேரணிக்கு ஏற்பாடாம்

கோலாலாம்பூர், பிப்ரவரி-3-‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக, 141 அரசு சார்பற்ற அமைப்புகள் (NGO) இணைந்து, கோலாலம்பூரில் வரும் சனிக்கிழமையன்று அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்தப் பேரணியை, சர்ச்சைக்குரிய சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சாம்ரி வினோத் தலைமையிலான Gerakan Anti-Rumah Anutan Haram ஒருங்கிணைக்கிறதாம்.

கோலாலம்பூர் Sogo பேரங்காடி அருகே, சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி 11 மணி வரை அப்பேரணி நடைபெறவுள்ளது.

அதற்கான பெர்மிட் அனுமதிக்கு அவர்கள் விண்ணப்பித்துள்ளதை டாங் வாங்கி மாவட்ட போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

“அனுமதியில்லாமல் மற்றவர் நிலத்தில் கட்டப்படும் வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; சட்டத்தை மீறும் இவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதும் இல்லை; எனவே கடுமையான சட்ட அமுலாக்கத்தை வலியுறுத்துவதே இப்பேரணியின் நோக்கம்” என சாம்ரி வினோத் கூறிக் கொண்டார்.

“சட்டத்தை மீறி கட்டப்பட்ட வழிபாட்டு இடங்களுக்கு அரசாங்கமே புதிய நிலம் மற்றும் இழப்பீடு வழங்குவது தவறு. மாறாக குற்றம் செய்தவர்களே இழப்பீடு செலுத்த வேண்டும்” என்றார் அவர்.

இவ்வேளையில், இந்த அமைதிப் பேரணி, இவ்வாரக் கடைசியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியா வரும் நேரத்தில் ஒரு கவன ஈர்ப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை சாம்ரி வினோத் மறுத்தார்.

மோடியின் வருகைக்கும் பேரணிக்கும் தொடர்பில்லை என்றும், இரண்டும் ஒரே தேதியில் வருவது தற்செயலாக நடக்கும் ஒன்றே என்றும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!