
கோலாலம்பூர், மார்ச் 11 – இந்த வார தொடக்கத்தில் பினாங்கு, செபராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தை பராமரிப்பு மையத்தின் பராமரிப்பில் இருந்தபோது நான்கு மாதக் குழந்தை இறந்ததைத் தொடர்ந்து, அந்த மையத்தை தற்காலிகமாக மூட சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
குழந்தையின் மரணம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக சமூக நலத்துறை தெரிவித்துளளது. மேலும் பகல்நேர பராமரிப்பு மைய செயல்பாடுகள் குறித்த விதிமுறைகளை மையம் பின்பற்றுகிறதா என்பதையும் இந்த விசாரணை உள்ளடக்கியிருக்கும் என்றும் கூறப்பட்டது.
1984 ஆம் ஆண்டின் குழந்தை பராமரிப்பு மையச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு மையமும் குழந்தை பராமரிப்பாளர்களின் தகுதிகள் மற்றும் குழந்தை பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விதிகளுக்கு இணங்க வேண்டும் என்றும் சமூக நலத்துறை வலியுறுத்தியது.
பராமரிப்பு மையத்தில் மயக்க நிலையில் காணப்பட்ட குழந்தை ஹெய்ல் ஹாரித் ஷாபிஸ் ( Hayl Haarith Syafaeez ) மார்ச் 9 ஆம் தேதி இறந்தான்.
மருத்துவமனையில் தாதியாக பணிபுரிந்த ஒருவரின் மகன் Hayl எனக் கூறப்பட்டது. அந்த தாதி இரவுப் பணியில் இருந்தபோது தனது மகனை பராமரிப்பு மையத்தில் விட்டுள்ளார்.
இதனிடையே Hayl மரணம் தொடர்பில் பராமரிப்பு மையத்தில் பணியாற்றும் இரண்டு பெண்கள் விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



