
கோலாலம்பூர், ஏப் 16 -சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பிச் சென்ற பாகிஸ்தானிய கைதியைக் கண்டுபிடிக்க உதவும் தகவலுக்கு , கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் 5,000 ரிங்கிட் வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 9 ஆம்தேதி இடமாற்றத்தின் போது தப்பிச் சென்ற அந்த கைதி, ஒரு வாரம் கழிந்த பிறகும் இன்னும் தலைமறைவாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று லிம் கூறினார்.
தப்பி ஓடிய இந்தக் கைதியை மீண்டும் கைது செய்ய வழிவகுக்கும் நம்பகமான தகவலுக்கு 5,000 ரிங்கிட் வெகுமதி அளிப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் லிம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் ஒரு சிறிய குறைபாடு அல்ல , இது அடிப்படைப் பாதுகாப்பில் ஏற்பட்ட ஒரு கடுமையான சீர்குலைவு என DAP நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சுட்டிக்காட்டினார்.
முழுமையான காவலில் உள்ள ஒரு கைதி, இடமாற்றத்தின் போது எப்படி எளிதாகத் தப்பி ஓட முடியும்? உயர் பாதுகாப்புச் சூழலில் இதுபோன்ற ஒரு குறைபாடு எப்படி சாத்தியமாகும் என லிம் கேள்வி எழுப்பினார்.



