
ஹைதராபாத், மே-13–இந்திய அரசு இன்று முதல் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரியை 6 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.
மேற்கு ஆசியப் போர் சூழ்நிலையால் பொருளாதார பாதிப்பை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தங்க இறக்குமதிக்கு 10 விழுக்காடு அடிப்படை சுங்க வரியும், 5 விழுக்காடு உள்கட்டமைப்பு மற்றும் வேளாண் மேம்பாட்டு வரியும் விதிக்கப்படும்.
முன்பு இவை முறையே 5 விழுக்காடு மற்றும் 1 விழுக்காடாக இருந்தன.
உலகில் தங்க பயன்பாட்டில் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில், 2025 முதல் 2026 நிதியாண்டில் தங்க இறக்குமதி 24 விழுக்காடு உயர்ந்து, சுமார் 72 பில்லியன் அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் மக்களை எரிபொருள் சேமிக்கவும், வெளிநாட்டு பயணங்களையும் தங்க நகை வாங்குவதையும் குறைக்கவும் கேட்டுக்கொண்டார்.
அந்நியச் செலாவணியை சேமித்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க இந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.



