
ரானாவ், ஜூன்-3-சபா, ரானாவ் மாவட்டத்தில் உள்ள குண்டாசாங் (Kundasang) பகுதியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
ரானாவ் நகருக்கு வடமேற்கே சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் இதன் மையப்புள்ளி அமைந்திருந்தது.
அதிகாலை வேளையில் ஏற்பட்ட இந்த அதிர்வுகள் குண்டாசாங் மற்றும் ரானாவ் சுற்றியுள்ள சில பகுதிகளில் இலேசாக உணரப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், அரசாங்கக் கட்டடங்கள் உள்ளிட்ட எந்தவொரு பொதுவுடமைகளுக்கும் கட்டமைப்புச் சேதங்கள் ஏற்பட்டதாகவோ அல்லது எவருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை என சபா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
நிலைமை தற்போது முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் மற்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும், தொடர் நில அதிர்வுகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



