சிங்கப்பூர் மக்களை குறிவைத்த போலி முதலீட்டு மோசடி: பட்டர்வெர்த்தில் நால்வர் கைது

பட்டர்வெர்த், ஜூன்-11– இணையம் மூலம் ‘தந்தான்’ (Tantan) எனும் போலி முதலீட்டு திட்டத்தை விளம்பரப்படுத்தி, சிங்கப்பூர் மக்களை குறிவைத்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
20 முதல் 36 வயதுக்குட்பட்ட அந்த நால்வரும், பட்டர்வெர்த்திலுள்ள ஒரு இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஐந்து கைப்பேசிகள், மூன்று மடிக்கணினிகள், ஒரு மோடம், ஒரு அணுகல் அட்டை மற்றும் ஒரு வீட்டுச் சாவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அசீஸி இஸ்மாயில் (Datuk Azizee Ismail) கூறினார்.
சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு செயலிகளை பயன்படுத்தி நடைபெறும் இணைய மோசடிகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
அதிக லாபம் தருவதாகக் கூறப்படும், குறிப்பாக இணையம் மூலம் அறிமுகப்படுத்தப்படும் முதலீட்டு திட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



