
கோலாலம்பூர், ஜூன்-24 – ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் 2025 (சட்டம் 866)-இன் கீழ் பயனர்களின் வயது சரிபார்ப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறும் சமூக ஊடகத் தளங்கள், 10 மில்லியன் ரிங்கிட் வரையிலான அபராதத்திற்கு உள்ளாகக்கூடும் என்று இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
சட்டம் 866-இன் பகுதி III-இன் கீழ் உள்ள கடமைகளை ஏதேனும் ஒரு செயலி சேவை வழங்குநர் நிறைவேற்றத் தவறினால், MCMC எனப்படும் மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விதிமீறல் அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ பாமி பாட்சில் தெரிவித்தார்.
அந்த அறிவிப்பைப் பெறும் உரிமம் பெற்ற சேவை வழங்குநர்கள், நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் அல்லது மறுஆய்வுக்காக MCMC-யிடம் முறையீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சட்டம் 866-இன் பகுதி III-ஐப் பின்பற்றத் தவறும் பட்சத்தில், அச்சட்டத்தின் பிரிவு 39-இன் கீழ், உரிமம் பெற்ற சேவை வழங்குநர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வின் போது பாமி குறிப்பிட்டார்.



