
கோலாலாம்பூர், ஜூன்-27-கோலாலம்பூர், DUKE நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் புரோட்டோன் சாகா கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் இருவர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்; ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
Jalan Kuching-ஙில் அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 3 பேர் பயணித்த அந்த வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி முழுமையாகத் தீப்பற்றி எரிந்ததாக நம்பப்படுகிறது.
அவசர அழைப்பைப் பெற்ற கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, ஸ்தாப்பாக் நிலையத்திலிருந்து 9 வீரர்களை சம்பவ இடத்திற்கு விரைவாக அனுப்பியது.
காரின் பெரும்பகுதியை நாசமாக்கிய தீயைக் கட்டுப்படுத்த சில நிமிடங்கள் பிடித்தது.
காரின் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கையில் இருந்த இருவர் மீட்கப்படுவதற்குள் கருகி உயிரிழந்த வேளையில், உயிர் தப்பிய நபரின் அடையாளம் இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அடுத்தகட்ட விசாரணை மற்றும் சவப் பரிசோதனைக்காகப் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



