உலகக் கிண்ண காற்பந்து போட்டி தொடர்பான மேலும் இரு சூதாட்ட மையங்கள் முறியடிப்பு -9 பேர் கைது

ஜோர்ஜ் டவுன், ஜூன்-29-உலகக் கிண்ண காற்பந்து போட்டி விளையாட்டு தொடர்பான சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு மையங்கள் பினாங்கில் முறியடிக்கப்பட்டன.
இதில் சம்பந்தப்பட்ட ஒரு பெண் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அதே வேளையில் பினாங்கு மாநிலத்தில் சூதாட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 21 சோதனைகளில், 28 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இச்சோதனைகளின்போது 8,935 ரிங்கிட் ரொக்கப் பணமும், கணினிகள், கை தொலைபேசிகள் , மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற இணையவழி சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ டெனிஸ் லிம் குவான் கெங் தெரிவித்தார்.
நேற்று குளுகோர் பகுதியிலுள்ள உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனையில் 29 முதல் 44 வயதுக்குட்பட்ட மூன்று வெளிநாட்டு ஆடவர்களுடன் உள்ளூர்ப் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
பட்டர்வெர்த்தில் அடுக்ககத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது நடவடிகையில் 27 முதல் 41 வயதுடைய 5 உள்நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1953-ஆம் ஆண்டின் பந்தயச் சட்டத்தின் பிரிவு 4(1)(e) மற்றும் 1953-ஆம் ஆண்டின் திறந்த வெளி சூதாட்ட விடுதிகள் சட்டத்தின் பிரிவு 4(1)(g) ஆகியவற்றின் கீழ் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணைக்கு உதவும் வகையில், கைது செய்யப்பட்ட அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



