
ஷா அலாம், ஜூன்-29-ஷா அலாம் புதிய எல்.ஆர்.டி ஷா ஆலம் வழித்தடம் இன்று
காலை ஆறு மணியளவில் தனது முதல் நாள் சேவையின் செயல்பாட்டின் போது 10,000 பயணிகளைப் பதிவு செய்துள்ளது.
வாரநாளில் தொடங்கப்பட்ட ஒரு சேவைக்கு இந்த எண்ணிக்கை நல்லதொரு தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பிரசரானா மலேசிய பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவரும் செயல் அதிகாரியுமான அமீர் ஹம்டான் (Amir Hamdan) கூறினார்.
முதல் நாளிலேயே 5,000 முதல் 10,000 பயணிகளை எட்டுவதே ஒரு சாதனை என இன்று எல்.ஆர்.டி ஷா ஆலம் கிளென்மேரி 2 நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நீண்ட வழித்தடத்தையும் பெரிய ரயில்களையும் கொண்டிருந்த போதிலும், எம்.ஆர்.டி புத்ராஜயா வழித்தடமும் அதன் தொடக்கத்தின் போது இதே போன்ற எண்ணிக்கையைப் பதிவு செய்தது.
தினசரி 67,000 பயணிகள் என்ற நிறுவனத்தின் முதல் ஆண்டு இலக்கிற்கு எதிராக இந்த எண்ணிக்கை ஊக்கமளிப்பதாக அவர் கூறினார். ஒரு புதிய வழித்தடத்தில் பயணிப்பவர்கள் பொதுவாக பரபரப்பான நேரங்களில் உடனடியாகப் பயணம் செய்வதில்லை.
அதை முயற்சி செய்து பார்க்க அவர்களுக்கு நேரம் கிடைக்கும். பயணிகள் ஒரு புதிய ரயில் பாதைக்குத் தங்கள் பயண வழக்கங்களை மாற்றிக்கொள்ள பொதுவாக நேரம் எடுக்கும்.
ஷா ஆலம் எல்ஆர்டி (LRT) வழித்தடம் மற்றும் அதன் இணைப்புச் சேவைகளில் பயணம் செய்வது ஒரு மாத காலத்திற்கு இலவசமாக இருக்கும்.
இதுவரை கிடைத்துள்ள வரவேற்பில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஆங்காங்கே சில சிறிய சிக்கல்கள் உள்ளன, ஆனால் அவை பெரிய விஷயங்கள் என்று தாம் நினைக்கவில்லையென அமிர் ஹம்டான் குறிப்பிட்டார்.



