Latestமலேசியா

மத்தியஸ்த மையத்தை தொடங்கிய பேராக் வழக்கறிஞர் மன்றம்; நீதியை எளிதாக அணுக புதிய வாய்ப்பு

வழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லாமல் விரைவாகவும் சுமுகமாகவும் தீர்வு காணும் நோக்கில் பேராக் வழக்கறிஞர்கள்ள் மத்தியஸ்த மையம் (Perak Bar Mediation Centre) இன்று (வெள்ளிக்கிழமை) ஈப்போவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

பிரதமர் துறையின் (சட்டம் மற்றும் நிறுவனச் சீர்திருத்தம்) துணை அமைச்சர் எம். குலசேகரன், இந்த மையத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

வழக்குத் தீர்ப்பில் நீதிமன்றமே ஒரே வழி அல்ல என்றும், மத்தியஸ்தம் மூலம் குறைந்த செலவில், குறுகிய காலத்தில், இரு தரப்பினருக்கும் ஏற்ற தீர்வை எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பேராக் வழக்கறிஞர் அமைப்பின் இந்த முயற்சி, பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் நீண்டகால நீதிமன்ற நடைமுறைகளைத் தவிர்த்து உரையாடல் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள உதவும் முக்கிய முன்னேற்றமாகும் என்றும் அவர் பாராட்டினார்.

மடானி அரசாங்கம் மாற்று தகராறு தீர்வு (ADR) முறைகளை வலுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட Pusat Mediasi MADANI திட்டத்தின் கீழ், RM2.5 லட்சம் வரையிலான 26 வகை வணிகத் தகராறுகளுக்கு இலவச மத்தியஸ்த சேவை வழங்கப்படுவதாகவும் குலசேகரன் கூறினார்.

இதுவரை 158 தன்னார்வ மத்தியஸ்தர்கள் பதிவு செய்திருப்பது இந்தத் திட்டத்திற்கு சட்டத்துறையினரின் வலுவான ஆதரவை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், மத்தியஸ்தத்தின் மூலம் எட்டப்படும் சர்வதேச உடன்பாடுகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் சட்டச் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது, சர்வதேச வணிகத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான மையமாக மலேசியாவின் நம்பகத்தன்மையை மேலும் உயர்த்தும் என்றார்.

இறுதியாக, நீதித்துறையில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம், சட்டத்துறை, நீதித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், பேராக் பார் மத்தியஸ்த மையம் அந்த இலக்கை நோக்கிய முக்கியமான முன்னெடுப்பாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்வு ஈப்போவில் உள்ள பேரா மலையாளிகள் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இதனை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் நிறைவு செய்து வைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!