
கோலாலம்பூர், ஜூலை.30- மியன்மாரில் தொடரும் இனப் படுகொலை தணியும் வரை, Rohingya அகதிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என மலேசியா உள்ளிட்ட ஆசியான் உறுப்பு நாடுகளை மியன்மார் Rohingya மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை முன் வைத்துள்ளது.
மியன்மாரில் நிலைமை பாதுகாப்பாக இல்லை. Rohingya அகதிகள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். அவர்களுக்கு வீடுகள் எதுவும் இல்லை. அனைத்தும் இராணுவ ஆட்சிக் குழுவால் மீண்டும் கைப்பற்றப்பட்டு விட்டன. Rohingya அகதிகளுக்கு குடியுரிமையோ, பாதுகாப்போ, கண்ணியமோ இல்லை என அவ்வமைப்பின் மலேசியத் தலைவர், 56 வயது Zafar கூறினார்.
மலேசியாவில் உள்ள 5,000 Rohingya அகதிகளின் முதல் கட்டக் குழுவைத் திருப்பி அனுப்ப மியன்மார் ஒப்புக் கொண்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த நிலையில், Zafar அவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பல உதவிகள் மூலம் மலேசியா Rohingyaக்களிடம் அனுதாபம் காட்டியுள்ளது. அவ்வகையில் அவர்களை நாடு கடத்துவதற்குப் பதிலாக, தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க மலேசிய அரசாங்கம் அவர்களை அனுமதிக்க வேண்டும் என Zafar கேட்டுக் கொண்டார்.
Rohingya சமூகம் உள்ளூர் நில உரிமைகளைக் கோருகிறது என்பது தவறான தகவல் எனக் குறிப்பிட்ட அவர், மலேசியாவில் நிகழும் குற்றங்களில் 0.02 சதவீதம் மட்டுமே Rohingya அகதிகளை உள்ளடக்கியுள்ளது என்பதைத் தரவுகள் காட்டுவதையும் சுட்டிக் காட்டினார்.
2017-ஆம் ஆண்டு இராணுவ அடக்குமுறையின் போது பெரும்பாலான Rohingyaக்கள் மியன்மாரில் இருந்து தப்பி ஓடினர். அவர்களில் பலர் வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.



