
கங்கார், ஆகஸ்ட்-5 – பெர்லிஸில் ஒரு சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாகப் போலீஸார் நடத்திய விசாரணையில், செய்தி அனுப்பும் செயலி (Messaging App) மூலமாகப் பாலியல் சேவைகளை வழங்கி வந்த 17 வயது சிறுமி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ், 34 வயது சந்தேக நபரை விசாரித்தபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாகக் கங்கார் மாவட்டப் போலீஸ் தலைவர் Yusharifuddin Yusop தெரிவித்தார்.
பள்ளியிலிருந்து பாதியிலேயே விலகிய அந்த 17 வயது சிறுமி, MiChat எனும் செயலி மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்தததை விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அந்த 34 வயது நபரைச் சந்தித்ததாகவும், ஜூலை 19-ஆம் தேதி ஹோட்டல் ஒன்றில் அவருடன் இருந்ததாகவும் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சந்தேக நபர் விசாரணைக்கு உதவும் வகையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம், அந்த பதின்ம வயது சிறுமியோ மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இல்லமொன்றில் வைக்கப்பட்டுள்ளார்.



