
வாஷிங்டன், ஆகஸ்ட்-7-ஈரானுடனான பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானதாகவும், தாமதமாகவும் இருக்கும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் எச்சரித்துள்ளார்.
Fox News ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், ஈரானின் தலைமைத்துவத்திற்குள் நிலவும் தீவிரக் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒப்பந்தத்தை எட்டுவது சுலபமல்ல எனக் கூறினார்.
ஈரானிய அரசில் அமைதியை விரும்புவோரும், தீவிரப் போக்கை ஆதரிக்கும் ‘தீவிரவாதிகளும்’ பிளவுபட்டு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த 48 மணி நேரங்களில் சுமூக முடிவு எட்டப்படலாம் என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், வான்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெறக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த வான்ஸ், தூதரக வழிமுறைகள், பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குச் சாதகமான ஒப்பந்தம் எட்டப்படும் என உறுதியளித்தார்.



