
சிப்பாங், ஆகஸ்ட் 25 – சிப்பாங் மாவட்டத்தில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த மொத்தம் 17.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் சிப்பாங் சர்வதேச சுற்றுப்பந்தயத் திடலில் (SIC) நடைபெறவுள்ள F1 போட்டியை முன்னிட்டு முக்கிய சாலைகளும் மேம்படுத்தப்படுகின்றன.
இதில் FT26, FT27 மற்றும் FT29 உள்ளிட்ட சாலைகளின் மேம்பாட்டுக்கு 16 மில்லியன் ரிங்கிட்டும், B48 சாலைக்கு 1.5 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் செப்டம்பர் நடுப்பகுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ’ அய்மான் அதிரா சாபு (Datuk Aiman Athirah Sabu), சாலைப் பணிகளின் தரம் மற்றும் நீடித்த தன்மையை உறுதி செய்ய தாம் நேரடியாக ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, கனரக வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் B48 சாலையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், சிப்பாங் மாவட்டத்தில் சாலை விளக்குகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக இதுவரை பொதுப்பணித்துறையிடமிருந்து சுமார் 7 மில்லியன் ரிங்கிட் நிதி பெற்றுள்ளதாக அவர் கூறினார். சைபர்ஜெயா உள்ளிட்ட சில பகுதிகளில் போதிய தெருவிளக்குகள் இல்லாத பிரச்சினையும் தீர்க்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.



