
காட்மண்டு, ஆகஸ்ட் 28 –நேப்பாளத்தைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடரும் நிலையில், 23 மலேசியர்களின் பெயர்கள் நேப்பாள போலீஸ் வெளியிட்டுள்ள காணாமல் போனோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
எனினும், இந்தப் பேரிடரில் மலேசியர்கள் உயிரிழந்ததாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என விஸ்மா புத்ரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நேப்பாள போலீஸ் வெளியிட்டிருப்பது காணாமல் போனவர்களின் பகுதியளவிலான பட்டியல் ஆகும். அதில் இடம்பெற்றுள்ள 23 மலேசியர்களில் 8 பெண்களும் 15 ஆண்களும் அடங்குகின்றனர். அவர்களின் பெயர், பிறந்த தேதி, குடியுரிமை உள்ளிட்ட விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, காணாமல் போன மலேசியர்களின் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன.
முன்னதாக, வெள்ளப் பேரிடருக்குப் பின்னர் 55 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களில் இரண்டு மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகளும், திபெத்தின் கைலாஷ் மலைக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 17 மலேசியர்களும் அடங்குவர்.
இந்நிலையில், சமூக ஊடகங்களிலும் அதிகாரப்பூர்வமற்ற தளங்களிலும் பரவும் உயிரிழப்பு தொடர்பான தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என விஸ்மா புத்ரா பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு மேலும் அச்சத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.
காட்மண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம், நேப்பாள அதிகாரிகள், தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள், சுற்றுலா வாரியம், பயண முகவர்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து மலேசியர்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், நேப்பாள போலீஸ் அடையாளம் காணப்படாத உயிரிழந்தவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு, அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
நேப்பாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளை உலுக்கிய இந்தப் பேரிடரில் 390-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,400 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மற்றும் கைலாஷ் யாத்திரிகர்களும் அடங்குகின்றனர்.
சாலைகள் துண்டிக்கப்பட்டு, பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், சேறும் சகதியும் நிறைந்த மலைப்பகுதிகளில் மீட்புக் குழுக்கள் காணாமல் போனவர்களைத் தேடும் பணியைத் தொடர்ந்து வருகின்றன.



