Latestமலேசியா

சரவணனின் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை; கிடைத்ததும் MACC-க்கு அனுப்புவேன் – அன்வார்

செபராங் பிறை, ஆகஸ்ட் 28 –முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தமக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் இதுவரை தம்மிடம் வந்து சேரவில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அது கிடைத்தவுடன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

“அதன் பின்னர் அது எனது விவகாரம் அல்ல. அவர்கள் விசாரணை நடத்துவதற்கும், சட்ட நடவடிக்கைகள் தொடர்வதற்கும் உரிய இடமளிக்க வேண்டும்.

“சரவணனின் வழக்கில் நீதிமன்றம் என்ன முடிவு செய்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்,” என அவர் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செபெராங் பிறை, செம்பிலாங் பள்ளிவாசலில் செய்தியாளர்களிடம் பேசியபோது அன்வார் இதனைக் கூறினார்.

வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீட்டு அனுமதிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மொத்தம் 10 லட்சத்து 97 ஆயிரம் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக சரவணன் மீது இன்று மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அந்த மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்த தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான சரவணன், தாம் குற்றமற்றவர் எனக் கூறி நீதிமன்ற விசாரணை கோரினார்.

தம்மீதான விசாரணை தொடர்பாக பிரதமர் அன்வாருக்கு கடிதம் எழுதியதை சரவணன் நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.

எனினும், வழக்கை மூடி மறைக்கவோ அல்லது தமக்கு சாதகமாக பிரதமரின் தலையீட்டைக் கோரவோ அந்தக் கடிதம் எழுதப்படவில்லை என அவர் இன்று திட்டவட்டமாக மறுத்தார்.

மாறாக, தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நம்பகத்தன்மை இல்லை எனக் கூறிய சரவணன், தமது வழக்கை முழுமையாகவும் முறையாகவும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையே பிரதமரிடம் முன்வைத்ததாக விளக்கமளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!