
பாலிங், கெடா, செப்டம்பர் 6 – கெடா பாலிங், லாத்தா டெபு (Lata Debu) மலையில் மலையேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 18 பேரில், 29 வயதுடைய பெண் ஒருவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, அப்பெண் உட்பட வழிதவறி சென்ற மேலும் இரண்டு இளைஞர்களைத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மயங்குவதற்கு முன்னதாக அந்தப் பெண்ணுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும், தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காலை 11.28 மணிக்கு பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முதலில் அந்தப் பெண்ணை மலையிலிருந்து பாதுகாப்பாக கீழே அழைத்து வந்த தீயணைப்பு வீரர்கள், வழித்தவறிச் சென்ற அவ்விரு மலையேற்ற வீரர்களையும் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் மலையேறிச் சென்று மீட்டனர்.
வானிலை இருள் சூழத் தொடங்கியதுடன், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் இருந்ததால் மூவரையும் விரைவாக கீழே அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களை பாதுகாப்பாக அழைத்து வர சுமார் ஐந்து மணி நேரம் ஆன நிலையில் வழுக்கும் பாறைகள், சிற்றாறுகள் மற்றும் அடர்ந்த புதர்களைக் கடக்க வேண்டியிருந்ததால் மீட்புப் பணி சவாலாக இருந்ததென கூறப்பட்டது. இந்த நடவடிக்கையில் காவல்துறையினர் மற்றும் கிராம மக்களும் உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.



