
கோலாலம்பூர், செப்-08-சிலாங்கூர், ஷா ஆலாம் விரைவுச்சாலையில் (KESAS) ஓய்வெடுக்கும் பகுதியின் எண்ணெய் நிலையமொன்றுக்கு அருகே வேன் ஒன்று டிரெய்லர் லாரியின் பின்புறத்தில் மோதியதில், குழந்தை உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்திற்கு அவசர அழைப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, Bukit Jalil தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனம் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தை அடைந்த மீட்புக் குழுவினர், ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்த வேன் ஓட்டுநரை மீட்டனர். அவ்விபத்தில் ஏழு பெரியவர்களுக்கும் குழந்தை ஒன்றுக்கும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டதாக மூத்த தீயணைப்பு அதிகாரி Mohd Redzuan Mohd Rani தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் மூவர் கோலாலம்பூர் மருத்துவமனைக்கும் மேலும் ஆறு பேர் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கும் மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.



