
வாஷிங்டன், செப். 9 – இதுவரை இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த GPT-6 Astra செயற்கை நுண்ணறிவு மாதிரியை ஓபன்ஏஐ அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே, செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி குறித்து அந்நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜாகுப் பச்சோக்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“செயற்கை நுண்ணறிவு தொடர்ந்து இதே வேகத்தில் வளர்ந்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள யாரும் தயாராக இல்லை” எனக் கூறிய அவர், எதிர்காலத்தின் கட்டுப்பாடு மனிதர்களிடமே இருப்பதை உறுதி செய்ய கூடுதல் நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே சில செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மனிதர்களின் நேரடி தலையீடின்றி செயல்பட்டு, நிறுவனங்கள் மீது இணையத் தாக்குதல்களை மேற்கொண்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும், சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் கட்டுப்பாட்டை மீறாமல் இருக்க, உலகளவில் கடுமையான பாதுகாப்பு விதிகள் தேவை என்றும் பச்சோக்கி வலியுறுத்தியுள்ளார்.



