ஜோகூர் டேசாருவில் சிங்கப்பூர் கார்களை உடைத்து திருட்டு ஜோகூர்

செப்டம்பர் 9 – ஜோகூர், டேசாருவிலுள்ள நீர்விளையாட்டு பூங்கா வாகன நிறுத்துமிடத்தில், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட மூன்று கார்கள் செப்டம்பர் 6ஆம் தேதி பகல் நேரத்தில் உடைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டேசாருவுக்கு வரும் சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மூன்று கார்களின் பக்க அல்லது பின்புற கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்ததுடன், கார்களுக்குள் வைக்கப்பட்டிருந்த பைகளை திருடர்கள் குறிவைத்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மூன்று சிங்கப்பூரர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து, Adventure Waterpark Desaru Coast பாதுகாப்பை பலப்படுத்தி, வாகன நிறுத்துமிடங்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளது.
சந்தேகநபர்களைக் கண்டறிய காவல்துறை விசாரணை நடத்தி வருவதுடன், சுற்றுலாப் பயணிகள் கார்களைப் பூட்டி, விலைமதிப்புள்ள பொருட்களை உள்ளே தெரியும்படி வைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



