
ஈப்போ, செப்டம்பர் 29 – பேராக் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா பாதுகாப்புத் துறையான Perhilitan, மஞ்சோங் பகுதியிலுள்ள கம்போங் சித்தியாவான், தெலாகா நெனாஸ் (Kampung Sitiawan, Telaga Nenas) மற்றும் புக்கிட் போத்தாக் (Bukit Botak) ஆகிய இடங்களில் முதலை நடமாட்டம் குறித்து கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
உள்ளூர் மக்களிடமிருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இதற்கு முன்பு முதலைகள் தென்பட்டதாக எந்தப் பதிவும் இல்லை என்று பேராக் Perhilitan இயக்குநர் டாக்டர் பாசில் அப்துல் பட்டா தெரிவித்தார்.
முதலைகளின் நடமாட்டத்திற்கு நீரின் ஏற்றத்தாழ்வு, உணவு கிடைக்கும் நிலை மற்றும் வாழ்விட மாற்றம் போன்ற காரணங்கள் இருக்கலாமென்று அவர் கூறினார். முதலைகள் அடிக்கடி தென்படும் இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
மேலும், மீனவர்கள், தூண்டில் மீன்பிடிப்பவர்கள் மற்றும் மீன் வளர்ப்பாளர்கள் அப்பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். முதலைகளை நெருங்கவோ, பிடிக்க முயற்சிக்கவோ அல்லது புகைப்படம் எடுக்க அவற்றைத் தொந்தரவு செய்யவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய முதலை நடமாட்டம் தென்பட்டால் Perhilitan அவசர எண்ணுக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



