Latestமலேசியா

நேப்பாள வெள்ளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்பங்களுக்கு உதவ வங்கிகள் தயார்

கோலாலம்பூர், அக்டோபர்-3,நேப்பாளப் பெரு வெள்ளத்தில் காணாமல் போன மலேசியர்களது குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் உதவிகளை வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன.

மாதாந்திர கடன் தவணையை ஒத்தி வைக்கும் Moratorium சலுகை, வங்கிச் சேவைக் கட்டண விலக்கு, காப்புறுதிப் பணம் கிடைப்பதை விரைவுப்படுத்துவது, தேவைப்படும் ஆவணங்களில் தளர்வுப் போக்கு போன்றை உதவிகளை வங்கிகள் வழங்கக் கூடும் என, மத்திய வங்கியான பேங்க் நெகாரா கூறியது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள் குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதிச் செய்ய வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் அணுக்கமாக ஒத்துழைக்கப் போவதாகவும், வாரிசுகள் அந்தந்த வங்கிகளைத் தொடர்புக் கொள்ளுமாறும் பேங்க் நெகாரா அறிவுறுத்தியது.

காணாமல் போனவர்களின் கடன்கள் மற்றும் பிற நிதிப் பொறுப்புகளுக்கான மாதாந்திர தவணைகளுக்கு தற்காலிக ஒத்திவைப்பு வழங்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

தங்களது கோரிக்கையானது கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கானது அல்ல என்றும், மாறாக அன்புக்குரியவர்களின் சட்டப்பூர்வ நிலை குறித்து முடிவு எட்டப்படும் வரை, தாமதக் கட்டணம் மற்றும் கடன் வசூல் நடவடிக்கைகள் போன்ற கூடுதல் நிதிச் சிக்கல்களைத் தவிர்ப்பதே நோக்கம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காணாமல் போன மலேசியர்களின் நிலையை விரைவாகத் தீர்மானிப்பதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க நேப்பாள அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

நேப்பாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு, காணாமல் போன 55 மலேசியர்களில் நேற்று ஒருவர் பாதுகாப்பாக தாயகம் வந்துசேர்ந்துள்ளார்.

எஞ்சியவர்களின்
குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்கள் குறித்த உறுதியான தகவலுக்காக தொடர்ந்து காத்திருக்கின்றனர்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!