Latestமலேசியா

Irene Sofiya பள்ளியில் சிசிடிவி கேமரா உள்ளது, ஆனால் சம்பவ இடத்தில் பொருத்தப்படவில்லை: Fadhlina

கோலாலம்பூர், அக்-05–ஜோகூர், Yong Pengங்கில் நான்காம் படிவ மாணவி Irene Sofiya Mohd Khairool Faisal கொலை செய்யப்பட்ட பள்ளியில் சிசிடிவி கேமரா வசதி இருக்கிறது. என்றாலும் சம்பவம் நடந்த இடத்தில் கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை என கல்வி அமைச்சர் Datuk Seri Fadhlina Sidek தெரிவித்துள்ளார். அதனைத் தொடந்து, தர செயல்பாட்டு நடைமுறைகள் SOP ஏதும் மீறப்பட்டதா என்பது குறித்து பள்ளியின் பாதுகாப்பு நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

சம்பவம் நடந்த நாளில் பாதுகாப்பு நிறுவனத்தின் ரோந்துப் பதிவுகளும் பணியாளர்கள் தங்கள் கடமைகளை முறையாக மேற்கொண்டார்களா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது. விதிமுறைகள் மீறப்பட்டது உறுதி செய்யப்பட்டால், அபராதம் விதிப்பது அல்லது பாதுகாப்பு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அவர் எச்சரித்தார். அதே வேளை ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராக்கள் செயல்படாமல் அல்லது பழுதடைந்திருந்தால், பள்ளிகள் உடனடியாக கல்வி அமைச்சுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரின் துயரத்தையும், வயது குறைந்த சந்தேக நபர் மீதான விசாரணையையும் கருத்தில் கொண்டு, சம்பவம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என Fadhlina பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். மாணவி தொழுகை அறையிலிருந்து சம்பவ இடத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும், தொழுகை அறையில் கண்ணாடி உடைந்திருந்ததாகவும் பரவும் தகவல்கள் உண்மையல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Irene Sofiya, சம்பவத்தன்று மாலை சுமார் 5.50 மணியளவில் பள்ளி மண்டபத்தில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் காணப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் உறுதிப்படுத்தியிருந்தார்.

அதனை அடுத்து, அதே நாள் மாலை சுமார் 7 மணியளவில் Yong Peng பகுதியில் 16 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் அக்டோபர் 9ஆம் தேதி வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!