Latestமலேசியா

போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு; 18.16 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருட்கள் பறிமுதல்

கோலாலம்பூர், அக்-09–Op Tebuan நடவடிக்கையின் மூலம், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் கும்பல் முறியடிக்கப்பட்டு ஏழு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர் கும்பல் நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் அவர்கள் அனைவரும் 34 முதல் 58 வயதுக்கு உட்பட்டவர்கள். பேராக், சிலாங்கூர், கெடா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட ஏழு சோதனைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் முதல் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அக்கும்பல், நாட்டின் வட பகுதியில் உள்ள அண்டை நாட்டிலிருந்து போதைப்பொருட்களைப் பெற்று, உள்ளூர் சந்தைகளிலும் வெளிநாடுகளிலும் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. முதல் சோதனையில் 26.2 கிலோகிராம் கஞ்சா மொட்டுகள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து நடத்தப்பட்ட ஆறு சோதனைகளில், சுமார் 210 கிலோகிராம் methamphetamine மற்றும் 69 கிலோகிராம் கஞ்சா மொட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு 18.16 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைதான ஏழு சந்தேக நபர்களும் 1952ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். சிலருக்கு ஏற்கெனவே போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான பதிவுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, 118,000 ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு ஹோண்டா வாகனங்களையும் ஐந்து வங்கி அட்டைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அச்சோதனையின் மூலம் போதைப்பொருட்களை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் விநியோகித்த கடத்தல் வலையமைப்பு முறியடிக்கப்பட்டுள்ளதாக Hussein தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!