Latestமலேசியா

Zakir Naikக்கை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்க மலேசியா முடிவு செய்யவில்லை

கோலாலம்பூர், நவ-3 –சர்ச்சைக்குரிய சமயப் போதகர் Dr Zakir Naikக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கும் எண்ணம் மலேசியாவிற்கு தற்போதைக்கு இல்லை. அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக மலேசியா எந்தவோர் உறுதிமொழியையும் அளிக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட நாடு கடத்தல் ஒப்பந்தம் மற்றும் 1992ஆம் ஆண்டு நாடு கடத்தல் சட்டத்தின் விதிகளின் கீழ் மலேசியாவுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் அடிப்படையில் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

Zakir Naikக்கை நாடு கடத்துவதற்கான இந்தியாவின் முந்தைய அதிகாரப்பூர்வ கோரிக்கை 2018ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி பெறப்பட்டது. அதனை மறுபரிசீலனை செய்யக் கோரும் தூதரகக் குறிப்பு ஒன்றை இந்திய அரசாங்கம் 2020ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி அனுப்பியது. தற்போதைய நிலையில், மலேசிய அரசாங்கத்துக்கு புதிய கோரிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை என Saifuddin விளக்கினார்.

இந்தியா விடுத்த நாடு கடத்தல் கோரிக்கையின் தற்போதைய நிலவரம், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களும் ஆதாரங்களும் மலேசியச் சட்டம், இருதரப்பு ஒப்பந்தத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவா என நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 18ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சநிலை மாநாட்டின்போது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் Zakir Naikக்கை நாடு கடத்துவது குறித்து கலந்துரையாடியதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!