
கோலாலம்பூர், நவம்பர்-3,கடந்த மாதம் நகை விநியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து சுமார் 8.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு நண்பர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
35 வயதான விற்பனையாளர் Tan Kah Seng மற்றும் 30 வயதான இயந்திரப் பணியாளர் Tan Chien Ann ஆகிய இருவரும் ஆயுதம் ஏந்திய கொள்ளை முயற்சி வழக்கில் கூட்டாகச் குற்றம் சாட்டப்பட்டனர்.
அக்டோபர் 14-ஆம் தேதி காலை பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பாக கையில் பாராங் ஏந்தி அவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
எனினும் இருவரும் குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரினர்.
இதையடுத்து இருவருக்கும் நீதிபதி தலா 15,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.
அவர்கள், மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள போலீஸ் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



