
கோலாலம்பூர், நவ- 3 –கடந்தாண்டு நவம்பர் 24ஆம் தேதி மலாக்காவின் Durian Tunggalலில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று ஆடவர்கள் உயிரிழந்தது தொடர்பான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படவில்லை. உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
காவல்துறையினர் சமர்ப்பித்த புலனாய்வு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த பின், அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த தேசிய சட்டத்துறை அலுவலகம் (AGC) கடந்த ஜூலை 20ஆம் தேதி முடிவெடுத்தது. விரிவான புலனாய்வு மற்றும் AGCயின் கூடுதல் அறிவுறுத்தல்கள் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக வைத்தே அம்முடிவு எடுக்கப்பட்டதாக Saifuddin விளக்கினார்.
விசாரணை தேதியை நிர்ணயிக்கக் கோரி புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி மலாக்கா நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்தது. நீதிமன்றம் விசாரணைத் தேதியை அறிவிக்கும் வரை காவல்துறை காத்திருக்கிறது. விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் முடிவெடுப்பது நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்விசாரணை எப்போது தொடங்கும், தாமதத்திற்கான காரணங்கள் என்ன என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் முன்னதாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் Saifuddin அவ்வாறு விளக்கினார்.
விசாரணையை நடத்துவதற்கு நீதிமன்றத்துக்கும் AGCக்கும் காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்கும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 339(1)-ன் கீழ் நடைபெறும் விசாரணை, உயிரிழப்புகளுக்கான காரணத்தையும் உண்மையான சூழ்நிலைகளையும் வெளிப்படுத்த உதவும் என்றும் அவர் கூறினார்.
கடந்தாண்டு நவம்பர் 24ஆம் தேதி Durian Tunggalலில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் அதிகாலை 4 மணியளவில் 24 முதல் 29 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர், காவல்துறை koperal ஒருவரை பாராங் கத்தியால் தாக்கியதாகவும் அதில் அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.



