Latestமலேசியா

செபெராங் ஜெயா மருத்துவமனையில் நீர்க்கசிவு: முழுமையான தணிக்கை நடத்த லிங்கேஸ்வரன் வலியுறுத்தல்

பினாங்கு, நவ 12-செபெராங் ஜெயா மருத்துவமனையின் புதிய கட்டிடமான Blok Bயில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி மழைநீர் வழிந்தோடியதுடன், நீர்க்கசிவுகளும் ஏற்பட்ட சம்பவம் குறித்து செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டின் மத்தியில் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட அப்புதிய கட்டிடத்தில் அத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. மேலும், அக்கட்டிட குறைபாடுகளுக்கான பொறுப்புக் காலம் (DLP) கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

2010ஆம் ஆண்டு முதல், அதாவது பாரிசான் நேசனல் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்ட அக்கட்டிட மேம்பாட்டுத் திட்டத்தில், வடிவமைப்பு, பொறியியல், கட்டுமானத் தரம் அல்லது வடிகால் அமைப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தனவா என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், அத்திட்டத்திற்குப் பொறுப்பான ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் யார் என்பதையும், கட்டிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பே அக்குறைபாடுகள் கண்டறியப்பட்டனவா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.

குறிப்பாக, நீர்க்கசிவுகள் நோயாளிகள் தங்கும் வார்டுகள், மருத்துவ உபகரணங்கள், மின்சார விநியோகம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளைப் பாதித்தால், நோயாளிகளின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்குப் பொறுப்பேற்பது யார் என்றும் லிங்கேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

எனவே, தேசிய தணிக்கைத் துறையும் நாடாளுமன்ற பொதுக் கணக்குத் தணிக்கை குழுவான PACயும் அத்திட்டம் முழுவதையும் தணிக்கை செய்ய வேண்டும். கவனக்குறைவு அல்லது நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பின்பற்றத் தவறியதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பில் எவ்வித அனுசரணையும் இருக்கக்கூடாது என்றும் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!